நீரா பானத்திற்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்க வேண்டும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ‘கள்’ இயக்கம் கோரிக்கை மனு
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என் நடராஜன் இல்ல விழாவுக்கு வந்தார்.
காங்கேயம்,
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என் நடராஜன் இல்ல விழாவுக்கு வந்தார் அவரிடம் ‘கள்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர் அதில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் ‘நீரா’ பானம் இறக்குவதற்கு தங்கள் அரசு அனுமதி அளித்துள்ளதை ‘கள்’ இயக்கம் வரவேற்கிறது. அரசின் தலையீடு இல்லாமல் நிபந்தனைக்கு அப்பாற்பட்டு ‘நீரா’ பானம் இறக்கி விற்கும் நிலைமை இருந்தால் மட்டுமே மக்களுக்கு முழுப்பயன் கிடைக்கும். அப்போது உள்நாட்டிலும் உலக அளவிலும் பன்னாட்டு பானங்களுக்கும் போட்டியாக சந்தைப்படுத்த முடியும், கிராமப்பொருளாதாரம் மேம்படும். நாட்டுக்கு பெரும் அளவிலான அன்னிய செலாவணியையும் ஈட்டிக்கொடுக்கும்.
‘கள்’ இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்புச்சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. மேலும் இது உலக அளவிலான நடைமுறையும் கூட. பீகாரில் அரசு பூரண மதுவிலக்கை அமலாக்கியபோது கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நடைமுறை கேரளாவிலும் பின்பற்றப்பட்டது. ‘கள்’ ஒரு தடை செய்யவேண்டிய போதைப்பொருளே என ‘கள்’ இயக்கத்துடன் வாதிட்டு நிரூபிக்க இதுவரை எவரும் முன்வரவில்லை. தமிழ்நாடு அரசு ‘கள்’ளுக்கு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்கி உணவுப் பொருளாக அறிவிக்க வேண்டும். அரசு நிபந்தனை இல்லாமல் ‘நீரா’வை இறக்கவும், ‘கள்’ளுக்கான தடையை நீக்கி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.