மூலனூர் அருகே வீட்டிற்குள் கார் புகுந்து விபத்து; விவசாயி பலி 3 பேர் படுகாயம்


மூலனூர் அருகே வீட்டிற்குள் கார் புகுந்து விபத்து; விவசாயி பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Jan 2018 3:15 AM IST (Updated: 1 Jan 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

மூலனூர் அருகே வீட்டிற்குள் கார் புகுந்த விபத்தில் காரில் பயணம் செய்த விவசாயி பலியானார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மூலனூர்,

கரூர் மாவட்டம் எரவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 75). விவசாயம் செய்து வந்தார். இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் இவருடைய உறவினரான பாலுச்சாமி (40) என்பவர் தனது காரில், சுப்பிரமணியை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்து சென்றார். அந்த காரில் பாலுச்சாமியின் தந்தை பழனிசாமி (70) மற்றும் தாயார் செல்லாத்தாள் (60) ஆகியோரும் சென்றனர்.

தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுப்பிரமணிக்கு சிகிச்சை முடிந்ததும் அதே காரில் 4 பேரும் எரவநாயக்கன்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை பாலுச்சாமி ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே பழனிசாமி அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் சுப்பிரமணியும், செல்லாத்தாளும் அமர்ந்து இருந்தனர்.

மூலனூர் காரையூர் காளியம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே மற்றொரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக பாலுச்சாமி, சாலையின் ஓரமாக காரை திருப்பினார். அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.

இதனால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிரமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாலுச்சாமி, பழனிசாமி மற்றும் செல்லாத்தாள் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சைஅளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துகுறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வீட்டின் மீது கார் மோதிய போது அந்த வீட்டில் யாரும் இல்லை. இதனால் பெரியஅளவில் உயர் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story