ஒட்டன்சத்திரம் அருகே கோர விபத்து: அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதல்; 8 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது, தனியார் பஸ் மோதிய விபத்தில் சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சந்திரன் என்பவர் ஓட்டினார். இதேபோல ஒட்டன்சத்திரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் டிரைவரும், உதவியாளரும் மட்டுமே பயணம் செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே பலக்கனூத்து–மூலச்சத்திரம் இடையே அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது சாலையில் ஒரு வளைவு பகுதியில் பஸ் திரும்பியது. இந்தநிலையில் எதிரே திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது, டிரைவர் இருக்கைக்கு பின்புறமாக பக்கவாட்டு பகுதியில் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் அரசு பஸ்சில் இருந்த பெரும்பாலான இருக்கைகள் முற்றிலும் சேதமடைந்தன. பஸ் மோதியபோது பயங்கர சத்தம் கேட்டது. மேலும் பஸ்சில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... என்று அபயக்குரல் எழுப்பினர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினரும், மற்ற வாகனங்களில் வந்தவர்களும் உடனடியாக 108 ஆம்புலன்சுகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த போதுமணி (வயது 25), ஜோடனியல் (12), வசீகரன் (21), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த விஸ்வநாதன் (63) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
படுகாயம் அடைந்த, திண்டுக்கல்லை சேர்ந்த மகாலட்சுமி (33), கோகிலா (14), முருகவள்ளி (46), முத்தழகு (36), சாந்தா (37), இடையக்கோட்டையை சேர்ந்த முனியப்பன் மகன் கவுதம் (18), எட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த சக்திவேல் மனைவி நாகலட்சுமி (25), நத்தத்தை சேர்ந்த பாண்டியராஜன் மகன் சபரி ஆர்விக் (6), ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சத்தியமூர்த்தி ஆகியோர் உள்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்டு திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சபரி ஆர்விக் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தனர். மேலும் 2 பெண்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தனர். அவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைகளுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 18 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக திண்டுக்கல்–பழனி சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் 2 பஸ்களையும் பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.
திண்டுக்கல்லில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க அமைச்சர்கள் அனைவரும் திண்டுக்கலுக்கு வந்தனர். இந்தநிலையில் ஒட்டன்சத்திரம் அருகே நடந்த விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் குறித்து அமைச்சர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். இறந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களையும் நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.
விபத்துக்கு காரணமாக இருந்த தனியார் பஸ்சில் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை. அதாவது அந்த தனியார் பஸ்சில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்களை அழைத்து சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பக்தர்கள் அனைவரும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அங்கு இறங்கிவிட்டனர். இதனால் பஸ்சில் டிரைவரும், உதவியாளரும் மட்டுமே இருந்துள்ளனர். நல்ல வேளையாக தனியார் பஸ்சில் யாரும் பயணம் செய்யவில்லை. இல்லை என்றால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். இதற்கிடையே விபத்து நடந்ததும் தனியார் பஸ் டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.