வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது
பெருங்குடியில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் மணிநாகப்பன். இவர், அதே பகுதியில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்துக்கு கனடா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்பு இருப்பதாக கூறி கல்லூரி முடித்து வெளியே வரும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை தேடுபவர்களை குறி வைத்து இணைய தளம் மூலம் தொடர்பு கொண்டார்.
இதனை நம்பிய திருவான்மியூரை சேர்ந்த என்ஜினீயர் அருண்குமார், மணிநாகப்பனை தொடர்பு கொண்டு தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தரும்படி கேட்டார். அதற்கு அவர், லண்டனில் வேலை இருப்பதாகவும், இதற்கு ரூ.1 லட்சம் தரவேண்டும் என்றும் கூறினார்.
அதன்படி அருண்குமார் ரூ.1 லட்சத்தை மணிநாகப்பனிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் மணிநாகப்பன், தான் கூறியபடி அருண்குமாருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்காமல், போலியான நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருண்குமார், இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மணிநாகப்பன், வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இவரிடம் வேலை கேட்டு வருபவர்களிடம் முதலில் பணி தயாராகி விட்டது என்று கூறி பணத்தை பெற்றுக்கொள்வதும், பின்னர் சிலநாட்கள் கழித்து சான்றிதழ் சரியில்லை என்று கூறி ஏமாற்றி அலைக்கழித்தும், போலி நியமன ஆணைகள் கொடுத்தும் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து மணிநாகப்பனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.