தூத்துக்குடி மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2018 4:15 AM IST (Updated: 1 Jan 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரஜினி ரசிகர்கள் நேற்று காலை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதிபடுத்தி உள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடியில் பழைய, புதிய பஸ் நிலையம், 1-ம் கேட், 2-ம் கேட், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, அண்ணாநகர் உள்பட மாநகர் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் டக்ளஸ், இதய ரோஜா ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தீரவாசகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்ச்சியில் ஸ்டைல் கிங் ரசிகர் மன்றம் தலைவர் விஜய் ஆனந்த், தெய்வீகத்தென்றல் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ஜெயபால், ஆலோசகர் குட்டிபாபு மற்றும் திரளான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

புதியம்புத்தூர் மெயின் பஜாரில் ரசிகர்மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் அந்தோனிராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், ஓட்டப்பிடாரம் ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் மாசானசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் துணை செயலாளர் ஜெயராஜ், புதியம்புத்தூர் மன்ற தலைவர் ரவி மற்றும் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் ரசிகர் மன்றத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

திருச்செந்தூர் ஒன்றிய, நகர நற்பணி மன்றம் சார்பில் திருச்செந்தூர் நகரில் தேரடி திடல், பகத்சிங் பஸ் நிலையம், இரும்பு ஆர்ச், வடக்கு ரத வீதி, கோவில் தெரு ஆகிய இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். ஒன்றிய தலைவர் மாணிக்கம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஆனந்த், ஒன்றிய பொருளாளர் நடேஷ், நகர தலைவர் செந்தில்குமார், நகர பொருளாளர் கண்ணன், ஒன்றிய செயற்குழு தலைவர் நமசிவாயம், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு, அனைத்து ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் ராஜா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாரிமுத்து, சீனிவாசன், பந்தலராஜா, சுரேஷ், முத்துமாரியப்பன், செல்வம், கணேசன், குமார் மற்றும் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் ரசிகர்கள், மன்ற தலைவர் தவமணி தலைமையில், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர். 

Next Story