சோதனையில் ரூ.10¾ லட்சம் பறிமுதல்: அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய விசாரணை


சோதனையில் ரூ.10¾ லட்சம் பறிமுதல்: அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய விசாரணை
x
தினத்தந்தி 1 Jan 2018 3:45 AM IST (Updated: 1 Jan 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.10¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரிகளிடம் விடிய, விடிய தீவிர விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் மாலை சேலம் லஞ்சஒழிப்பு போலீசார் மற்றும் ஆய்வுக்குழுவினர் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த மண்டல உதவி இயக்குனர் கண்ணன், அலுவலக சூப்பிரண்டு நாகராஜன், செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் யாரையும் வெளியே விடவில்லை. 25-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகளிடம் விசாரணை

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ரூ.10¾ லட்சம் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போது குப்பைத்தொட்டியில் இருந்தும் பணம் கண்டறிந்து எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த பணம் குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இவ்வளவு பணம் எப்படி வந்தது, யார் கொடுத்தது என்பன உள்ளிட்டவை குறித்து விசாரணை விடிய, விடிய நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த விசாரணை நேற்று காலை சுமார் 9.30 மணி வரை நடந்தது. ஒவ்வொருவரிடமும் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அவர்களிடம் போலீசார் எழுதி வாங்கினர். இதையடுத்து போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளோம்

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, “லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இங்கு சோதனை நடத்தப்பட்டது. இந்த அலுவலகத்தில் இருந்து ரூ.10¾ லட்சம் பறிமுதல் செய்து உள்ளோம். இந்த பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளோம். மேலும் யார், யாரிடம் இருந்து எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பது தொடர்பாக எழுதி வாங்கி உள்ளோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்‘ என்றனர்.


Next Story