கட்டையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சாவு போலீசார் விசாரணை


கட்டையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 Dec 2017 10:15 PM GMT (Updated: 2018-01-01T03:55:43+05:30)

சேலத்தில் கட்டையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் வடக்கு அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 55). இவருடைய மனைவி கலையரசி. இவர் அதே பகுதியில் மண்பாண்டம் கடை வைத்துள்ளார்.

கடந்த மாதம் 23-ந் தேதி கடை முன்பு வடிவேல் தனது மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தென்அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வகுமார் (45) என்பவர் வந்தார். பின்னர் அவர், கணவர் - மனைவி தகராறை தீர்த்து வைக்க முயன்றார். அப்போது வடிவேல் அங்கிருந்த கட்டையை எடுத்து செல்வகுமார் தலையில் தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் முதலில் அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன்பின்னர் செல்வகுமார் இறந்ததை தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story