அரசியல் பிரவேச அறிவிப்பை கேட்டதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


அரசியல் பிரவேச அறிவிப்பை கேட்டதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2017 10:45 PM GMT (Updated: 2018-01-01T03:55:58+05:30)

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பை கேட்டதும் திருச்சியில் அவருடைய ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். காந்தி சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

திருச்சி,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவார் என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து பேசி வந்த ரஜினிகாந்த், அரசியலில் தீவிரமாக இறங்கி தனி கட்சி தொடங்கி, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட போவதாக நேற்று அறிவித்தார். ரஜினிகாந்தின் இந்த அதிரடி அறிவிப்பு அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இனிப்பு வழங்கினர்

ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பை கேட்டதும் அவரது ரசிகர்கள் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் கூடினார்கள். ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில் நிர்வாகிகள் இளங்கோ, சக்திவேல், ராஜூ, சந்திரசேகர், சோமு உள்பட ஏராளமானவர்கள் ரஜினிகாந்த் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் சாலையில் நடந்து சென்றவர்கள், பஸ் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள். பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் தலைமை தபால் நிலைய ரவுண்டானாவில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்தனர்.இதேபோல் அந்தநல்லூர் ஒன்றியம் குழுமணி அருகே உள்ள அயிலாப்பேட்டை, மேலப்பட்டி ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில் அங்குள்ள கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் ரசிகர் மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற செயலாளர் வீரமணி, பொருளாளர் ரவி, மலையாளம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story