கோவை அருகே உள்ள மத்திய அரசு அச்சகம் மூடப்படுவதை கண்டித்து முற்றுகை போராட்டம்


கோவை அருகே உள்ள மத்திய அரசு அச்சகம் மூடப்படுவதை கண்டித்து முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2018 3:30 AM IST (Updated: 2 Jan 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே உள்ள மத்திய அரசு அச்சகம் மூடப்படுவதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவது என்று கோவையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

கோவையை அடுத்த நெ.4 வீரபாண்டி அருகே உள்ள பிரஸ் காலனியில் 1964–ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளின் அச்சு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதல்– அமைச்சராக இருந்த காமராஜர் முயற்சியால் புதிய அச்சகம் அமைக்கப்பட்டது. மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இது செயல்பட்டு வந்தது. 132.7 ஏக்கர் பரப்பளவில் அச்சகம் அமைக்கப்பட்டு அதில் ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். அதன்பின்னர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு தற்போது 67 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை தாண்டியவர்கள்.

இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 21–ந் தேதி பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள 17 அச்சகங்களை 5 ஆக குறைத்து இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை பிரஸ் காலனியில் உள்ள அச்சகம் உள்படர கேரளாவில் கொரட்டி, கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய இடங்களில் உள்ள அச்சகங்களையும் மூட மத்திய அரசு முடிவு செய்தது. தென்மாநிலங்களில் உள்ள அனைத்து அச்சகங்களையும் மூடிவிட்டு அந்த இடங்களை விற்று நாசிக்கில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கோவை பிரஸ்காலனியில் உள்ள அச்சகத்தில் தபால் துறை பாஸ் புத்தகங்கள், படிவங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கேள்வித்தாள் ஆகியவை அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த அச்சகத்தை மூடுவதால் அவற்றில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசின் அச்சகத்தை வருகிற 15–ந் தேதி முதல் மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் தற்போது பணியாற்றி வருபவர்கள் நாசிக்கில் சென்று பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே அச்சகத்தை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டம் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று காலை நடந்தது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அறிவரசு(தி.மு.க.), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ), சிவஞானம், ஆறுமுகம் (இந்திய கம்யூ), ஆரோக்கியசாமி (தே.மு.தி.க.), சேதுபதி (ம.தி.மு.க.), தங்கவேல் (ஏ.ஐ.டி.யு,சி.), அப்துல்கரீம் (எஸ்.டி.பி.ஐ.), மாணிக்கம் (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை) உள்பட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,கோவையை அடுத்த பிரஸ்காலனியில் உள்ள அச்சகத்தை வருகிற 15–ந் தேதி முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மத்தியஅரசு தனது உத்தரவை கைவிடக்கோரி வருகிற 6–ந் தேதி அந்த அச்சகத்தை முற்றுகையிடுவது. வருகிற 9–ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் முதல் வீரபாண்டி பிரிவு வரை உள்ள கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story