வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுமா?


வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுமா?
x
தினத்தந்தி 2 Jan 2018 4:00 AM IST (Updated: 2 Jan 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது, தேரோட்டம் நடைபெறுவதில் பாதிப்பு எற்படுமா? என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்பதால் சென்னை மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் பிரமோற்சவத்தின்போது தேரோட்டம் நடைபெறும். இதில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபடுவார்கள்.

இதற்காக 75 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.46 லட்சம் செலவில் 41 அடி உயர மரத்தேர் தயாரிக்கப்பட்டது. கடந்த 2015–ம் ஆண்டு இந்த தேர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, 2016–ம் ஆண்டு முதல் முறையாக தேரோட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டும் தேரோட்டம் நடந்தது.

தேரோட்டத்தின் போது கோவில் முன் நிலை நிறுத்தப்பட்டுள்ள தேர், சன்னதி தெருவில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்து பின்னர் மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் எல்லையம்மன் கோவில் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சன்னதி தெருவுக்குள் வந்து தேர் நிறுத்தும் நிலையை வந்தடையும்.

தற்போது திருவொற்றியூர் டோல்கேட் முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் செல்வதற்காக உயர்த்தப்பட்ட பாதைகள் அமைக்க தூண்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

தேரடி பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையம் வருகின்றது. அந்த பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. இதனால் இந்த ஆண்டு பிரமோற்சவ விழாவின் போது வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் மெட்ரோ ரெயில் பணிகளால் நடைபெறுமா? என்ற ஐயம் பரவலாக எழுந்துள்ளது.

இது குறித்து திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் புலவர் மா.கி.ரமணன் கூறியதாவது–

திருவொற்றியூர் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுவதில் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். அதை வரவேற்கின்றோம். திருவொற்றியூர் டோல்கேட்டில் தொடங்கப்பட்டு தற்போது எல்லையம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மெட்ரோ ரெயிலுக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது.

மாசி பிரமோற்சவம் நெருக்கத்தில் தேரடியில் மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதே நேரத்தில் வடிவுடையம்மன் கோவில் 41 அடி உயர தேர் ஆடி அசைந்து சன்னதி தெருவில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.

தேர் திரும்புவதற்கான இடம் விசாலமானதாக இல்லாதபட்சத்தில் தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் 63 நாயன்மார்களின் மாடவீதி உலாவிற்கும் மெட்ரோ ரெயில் பணிகளால் பாதிப்பு இருக்கும். தேரோட்டம் நடைபெறுதை மனதில் கொண்டு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற வேண்டும். வரும் காலங்களில் பழம்பெருமை வாய்ந்த வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுவதற்கு வசதியாக தேரின் உயரம், அகலத்துக்கு ஏற்ப மெட்ரோ ரெயில் பாதையை அமைக்க வேண்டும்.

கவுரி ஆசிரம பகுதியில் அமைய இருந்த ரெயில் நிறுத்தம் தற்போது தேரடியில் அமைய உள்ளது. அந்த மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கவுரி ஆசிரமம் நிறுத்தம் என்று பெயர் வைக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அங்கு மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமையாததால் தேரடியில் அமைய உள்ள ரெயில் நிலையத்துக்கு திருவொற்றியூர் கோவில் நிறுத்தம் என்று பெயர் மாற்றி வைக்க வேண்டும்.

எனவே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பழமை வாய்ந்த வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற வேண்டும். மெட்ரோ ரெயில் திட்டத்தால் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உத்திரவாதத்தையும் பக்தர்களுக்கு அளித்து அவர்களின் குழப்பத்தை போக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story