திண்டுக்கல்–பழனி ரெயில் வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்


திண்டுக்கல்–பழனி ரெயில் வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 1 Jan 2018 10:00 PM GMT (Updated: 2018-01-02T01:41:36+05:30)

திண்டுக்கல்–பழனி ரெயில் வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சத்திரப்பட்டி,

திண்டுக்கல்–பழனி, ரெயில் வழித்தடத்தில் மொத்தம் 15 ஆளில்லா ரெயில்வே கேட்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் ரெயில்கள் வருவதை கவனிக்காமல் சில வாகன ஓட்டிகள் ரெயில் பாதையை கடக்க முயலும் போது விபத்தில் சிக்குகின்றனர். இதில் பெரும் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதையடுத்து விபத்துகளை தடுக்க திண்டுக்கல்–பழனி வழித்தடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட்கள் அமைந்துள்ள இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சுரங்கப்பாதை ரெயில் தண்டவாளங்களின் அடியில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது திண்டுக்கல்–பழனி வழித்தடத்தில் உள்ள ஆளில்லா ரெயில்வே கேட்களின் அருகில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சுரங்கப்பாதை அமையும் இடத்தில் உள்ள ரெயில் தண்டவாளங்களை தாங்குவதற்காக சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் பாலம் போல் இரும்பு கர்டர்களும் பதிக்கப்பட்டு வருகின்றனர். இரும்பு கர்டர்களை தூக்கி சுரங்கப்பாதை அமையும் இடங்களில் வைப்பதற்காக ராட்சத எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பணிகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் ரெயில்கள் வராத நேரத்தில் மட்டும் நடைபெறுகிறது. இதனால் திண்டுக்கல்–பழனி வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்காது. ஆனால் இந்த இடத்தை தாண்டும் வரை ரெயில்களை 10 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை பணிக்காக ஆளில்லாத ரெயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் ராட்சத எந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படும் என்றனர்.


Next Story