மரத்தில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு


மரத்தில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 1 Jan 2018 9:45 PM GMT (Updated: 2018-01-02T01:49:54+05:30)

ஈரோட்டில், புத்தாண்டு நள்ளிரவில் மரத்தில் கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25). இவர் ஈரோடு அருகே உள்ள சோலாரில் குடியிருந்து வந்தார். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஞ்சித்குமார், அவருடன் வேலை பார்க்கும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (24) என்பவரின் வீட்டுக்கு வந்தார். பின்னர் 2 பேரும் ‘கேக்’ வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்கள்.

அதைத்தொடர்ந்து அருண்குமார் தன்னுடைய காரில் ரஞ்சித்குமாரை ஏற்றிக்கொண்டு ஈரோடு –சத்தி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். காரை அருண்குமார் ஓட்டினார். இந்த கார் ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள ஒரு புளியமரத்தில் கார் வேகமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

மேலும் இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி ரஞ்சித்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அருண்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story