ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jan 2018 4:00 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டையொட்டி புதுக்கோட்டை மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். மேலும் சிறுமிகள் தேவதைபோல் உடை அணிந்து நடனமாடி ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தி புத்தாண்டை வரவேற்றனர்.

தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டி பிடித்தும், கை குலுக்கியும், இனிப்புகளை வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதைப்போல புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் மனோன்மணி அம்மன் கோவில், சாந்தநாதசுவாமி கோவில், அரியநாச்சியம்மன் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவரங்குளம்-அறந்தாங்கி

திருவரங்குளம் அருகே உள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பொற்பனைக்கோட்டை முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல திருவரங்குளத்தில் உள்ள சிவன்கோவில் உள்பட அனைத்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அறந்தாங்கி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி ராஜேந்திர சோழீஸ்வரர், அன்னபூரணி அம்மாள், முருகன், கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அய்யப்பனுக்கு ரூபாய் நோட்டு, மலர், பழ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூவை மாநகரத்தார் செய்திருந்தனர்.

நார்த்தாமலை-நமணசமுத்திரம்

ஆங்கில புத்தாண்டையொட்டி பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில், அன்னவாசல் சிவன் கோவில் இலுப்பூர், திருவேங்கைவாசல், வயலோகம், குடுமியான்மலை, பரம்பூர், வேளாம்பட்டி, தாண்றீஸ்வரம், வெள்ளனூர், மலைக்குடிபட்டி போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சாமிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். பின்பு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நமணசமுத்திரம் அருகே உள்ள பேரையூர் நாகநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கீரமங்கலம்

கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி கோவிலில் அதிகாலை முதல் சிவலிங்கம், அம்பாள், சண்முகநாதர் மற்றும் பல்வேறு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல செரியலூர் கறம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில், கொத்தமங்கலம் முத்துமாரியம்மன், மேற்பனைக்காடு மழைமாரியம்மன், குளமங்கலம் மாரியம்மன் கோவில்கள், சேந்தன்குடி ஜெயநகரம் பாலசுப்பிரமணியர் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. செரியலூர் கறம்பக்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.



Next Story