நிலத்தில் கிடந்த ரூ.30 லட்சம் ஐம்பொன் சிலை கடத்தல் கும்பல் கைவரிசையா? போலீஸ் விசாரணை


நிலத்தில் கிடந்த ரூ.30 லட்சம் ஐம்பொன் சிலை கடத்தல் கும்பல் கைவரிசையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 Jan 2018 10:45 PM GMT (Updated: 2018-01-02T03:00:54+05:30)

ஆம்பூர் அருகே நிலத்தில் கிடந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலையை அதிகாரிகள் மீட்டனர். சிலை கடத்தும் கும்பல் கைவரிசையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருமலைகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையல்காரபட்டி பகுதியில் மாதனூர் - ஒடுகத்தூர் சாலையில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் விலை மதிப்பு மிக்க ஐம்பொன் சிலை கிடப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசாரும், ஆம்பூர் தாசில்தார் மீராபென்காந்தி தலைமையில் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் அந்த சிலையை மீட்டு பரிசோதித்த போது, அது சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2½ அடி உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான வரதராஜ பெருமாள் சிலை என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள், சிலையை மீட்டு ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

விலை மதிப்பு மிக்க ஐம்பொன் சிலை இங்கு எப்படி வந்தது?. சிலை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தி வந்து இப்பகுதியில் விட்டு விட்டு சென்றனரா? அல்லது அதே பகுதியில் உள்ள யாராவது வெளிநாட்டிற்கு கடத்த முயன்றபோது தகவல் தெரிந்து சாலையோரம் வைத்துவிட்டு தப்பி சென்றனரா? என வேப்பங்குப்பம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் அருகே பூமாலை பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 சிலைகள் திருட்டு போனது. இதனால் அந்த சிலையாக இருக்கலாமா? என கருதி அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து பார்த்துவிட்டு சென்றனர்.

வெங்கிளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐம்பொன் அம்மன் சிலை ஒன்று கிடந்தது குறிப்பிடத்தக்கது.

ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து ஐம்பொன் சிலைகள் திருட்டு நடப்பதும், சாலையோரம் ஐம்பொன் சிலைகள் கிடைப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதனால் இப்பகுதியை சேர்ந்த யாராவது ஐம்பொன் சிலைகளை திருடி வெளிநாட்டிற்கு கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் எனவும், எனவே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆம்பூர் பகுதியில் முகாமிட்டு உரிய விசாரணை நடத்தி சிலை கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story