பச்சியம்மன் கோவில் பூட்டை உடைத்து சிலை திருட்டு போலீசார் விசாரணை


பச்சியம்மன் கோவில் பூட்டை உடைத்து சிலை திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Jan 2018 4:15 AM IST (Updated: 2 Jan 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பச்சியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து சிலையை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அம்மாபாளையத்தில் பச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 55 கிலோ எடை கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கோவிலின் கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த அம்மன் சிலையை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகி சேகர் இதுபற்றி பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார், சிலை திருட்டு நடந்த கோவிலுக்கு மோப்பநாயுடன் சென்று சோதனை நடத்தினார்கள். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த அம்மன் சிலை ஏற்கனவே கடந்த 2000-ம் ஆண்டில் திருட்டு போனது. பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு பின் வாணியாற்றில் இருந்து சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சிலை மீண்டும் திருட்டு போய் உள்ளது. இந்த சிலை திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story