புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு: பெயிண்டர் உள்பட 4 பேர் கொலை


புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு: பெயிண்டர் உள்பட 4 பேர் கொலை
x
தினத்தந்தி 1 Jan 2018 10:30 PM GMT (Updated: 1 Jan 2018 10:30 PM GMT)

பெங்களூருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் பெயிண்டர் உள்பட 4 பேர் கொலை செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கசுவனஹள்ளியில் வசித்து வந்தவர் சிவராம் (வயது 26). பெயிண்டர். இவர் அந்த பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் புத்தாண்டையொட்டி கேக் வெட்டி கொண்டாடுவதற்கு தயாரானார். அப்போது, அங்கு இருந்தவர்களுக்கும் சிவராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த அவர்கள் சிவராமை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். உடனடியாக அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் பெல்லந்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதாவது புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒருவருக்கொருவர் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளனர். அப்போது கன்னட மொழியில் புத்தாண்டு வாழ்த்து கூறும்படி கூறியதால் ஏற்பட்ட தகராறில் சிவராம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், பெங்களூரு அஞ்சனப்பா கார்டனில் வசித்து வந்தவர் வினோத் (22). இவர், அச்சகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற நிலையில் அவரை வழிமறித்த மர்மநபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மர்மநபர்கள் வினோத்தை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். கத்திக்குத்து காயமடைந்த வினோத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல், பெங்களூரு ஜரகனஹள்ளியில் வசித்து வந்த ஹேமந்த் குமார் (25) தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜே.பி.நகர் அருகே உள்ள மதுபான விடுதியில் மது அருந்தியுள்ளார். பின்னர், அவர்கள் அனைவரும் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இந்த வேளையில் ஹேமந்த்குமாருக்கும், அவரது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அவர்கள் ஹேமந்த் குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதேபோல், பெங்களூரு ஜே.பி.நகர் 1–வது ஸ்டேஜ், சாகாம்பரி நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதிகாலை 2.30 மணியளவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் அமீத் (25) என்பவரை மர்மநபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர்.

இந்த கொலை சம்பவங்கள் குறித்த தனித்தனி புகார்களின் அடிப்படையில் பெல்லந்தூர், காட்டன்பேட்டை மற்றும் ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அடுத்தடுத்து பெயிண்டர் உள்பட 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story