காஞ்சீபுரம், வாலாஜாபாத் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


காஞ்சீபுரம், வாலாஜாபாத் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jan 2018 4:41 AM IST (Updated: 2 Jan 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம், வாலாஜாபாத், மாகரல், சுங்குவார்சத்திரம், சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான தனிப்படை போலீசார், வாலாஜாபாத் அருகே காஞ்சீபுரம்–செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் முத்தியால்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த சதாம்உசேன்(வயது 28), சிங்காடிவாக்கம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்(25) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருடிய 25 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான சதாம்உசேன், ரஞ்சித் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story