தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து ராமநாதபுரத்தில் அரசு டாக்டர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து ராமநாதபுரத்தில் அரசு டாக்டர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பினை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பினை உருவாக்கி அதுதொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் நேற்று ஒருநாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய மருத்துவ கழகத்தின் டாக்டர்கள் அனைவரும் மத்திய அரசின் இந்த மசோதாவை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வெளிநோயாளிகள் பிரிவில் பணிகளை புறக்கணித்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், பொருளாளர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களின் கண்டனத்தை தெரிவித்து கோஷமிட்டனர்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் தங்களின் பணிகளை புறக்கணித்து ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்நோயாளிகள் பிரிவில் அனைவருக்கும் முறையான சிகிச்சை அளித்ததாலும், வெளிநோயாளிகள் பிரிவில் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் சிகிச்சை அளித்ததாலும் நோயாளிகள் பாதிக்கப்படவில்லை.
தங்களின் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்து மசோதாவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் போன்றவற்றில் இந்திய மருத்துவ கழகம் எடுக்கும் முடிவின்படி செயல்பட தயாராக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.