சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை
சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்–அமைச்சருக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபாகரன் மற்றும் கட்சியினர் தமிழக முதல்–அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு கால்வாய் பாசனத்தின் மூலம் 80 கிராமங்களை சேர்ந்த 130 கண்மாய்களுக்கு உட்பட்ட சுமார் 6 ஆயிரத்து 800 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. பெரியாறு கால்வாய் தண்ணீர் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த குறிச்சிபட்டியில் இருந்து ஷீல்டு மற்றும் லெசிஸ் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களின் வழியாக சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சேரும். கடந்த மாதம் 5–ந்தேதி பெரியாற்றில் இருந்து பாசனத்திற்காக ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் விடும்போதே பெரியாற்று தண்ணீரில் சிவகங்கை மாவட்ட நேரடி பாசன பகுதிக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து கடந்த மாதம் 17–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பெரியாறு கால்வாய் தண்ணீரை நம்பி பயிரிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. அத்துடன் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பயிர்களை காப்பாற்ற பெரியாறு கால்வாயில் தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தண்ணீருக்கு போராடாமல் இருக்க சிவகங்கை மாவட்டத்திற்குரிய பங்கு தண்ணீரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.