இந்துக்கோவில்களை நிர்வகிக்க நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கக்கோரி வழக்கு அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


இந்துக்கோவில்களை நிர்வகிக்க நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கக்கோரி வழக்கு அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 3 Jan 2018 3:15 AM IST (Updated: 3 Jan 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இந்துக் கோவில்களை நிர்வகிக்க நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கக்கோரிய வழக்கில் இந்து அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் மாரிக்கோணத்தைச் சேர்ந்த அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கேரள மாநிலத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் 1956–ல் பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அப்போது திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 490 இந்து கோவில்களும், அந்த கோவில்களுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்களும், தோட்டங்களும் தமிழக இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த கோவில்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும் அப்போது தமிழக அரசின் வசம் வந்தன.

கோவில் சொத்துகளில் இருந்து வரும் வருவாயை கோவில் பராமரிப்புக்கு செலவிட வேண்டும். அதன்படி 1969–ம் ஆண்டு வரை அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் கோவில் சொத்துகளை முறையாக பராமரித்து வந்தனர். பின்னர் அரசியல் தலையீடு காரணமாக கோவில் நிர்வாகங்கள் சரிவர நடக்கவில்லை. அரசியல் சார்புடையவர்கள் கோவில் சொத்துக்களை கொள்ளையடித்து வருகிறார்கள். இதை கோவில் அறங்காவலர்களும், அறநிலையத்துறை அதிகாரிகளும் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் 5 பெரிய கோவில்களின் மேம்பாட்டில் மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவனம் செலுத்தி வருகிறார். பிற கோவில்களில் பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கவில்லை. 5 கோவில்களை தவிர மீதம் உள்ளவற்றில் 75 சதவீத கோவில்கள் இருக்குமிடமே அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியாது. இந்துக் கோவில் வருமானத்தை மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், இந்து மதத்தை சேர்ந்த ஏழைகளின் நலனுக்காகவும் பயன்படுத் வேண்டும் என்று அறநிலையத்துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சட்டத்துக்கு எதிராக குமரி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட, இணைக்கப்படாத திருக்கோவில்கள் தேவசம்போர்டும், அறநிலையத்துறை இணை ஆணையரும் செயல்படுகின்றனர். எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 இந்துக் கோவில்களையும் நிர்வகிக்க நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையரும், குமரி மாவட்ட இணைக்கப்பட்ட, இணைக்கப்படாத திருக்கோவில்கள் தேவசம்போர்டும் பதில் அளிக்கும்வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை அடுத்த மாதம் (பிப்ரவரி) 5–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story