மரத்தில் கார் மோதி விபத்து மும்பையை சேர்ந்த தாய்–2 மகள்கள் சாவு
மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மும்பையை சேர்ந்த தாய்– 2 மகள்கள் உயிரிழந்தனர்.
பெங்களூரு,
மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மும்பையை சேர்ந்த தாய்– 2 மகள்கள் உயிரிழந்தனர். இவர்கள் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
3 பேர் சாவுபெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா நிப்பானி புறநகரில் நேற்று அதிகாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் கார், அப்பளம்போல் நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நிப்பானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரில் பயணித்த 3 பெண்கள் உடல் நசுங்கி இறந்ததும், டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவதும் தெரியவந்தது.
மும்பையை சேர்ந்தவர்கள்இதையடுத்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இறந்தவர்கள் மும்பையை சேர்ந்த சாவித்ரி குப்தா (வயது 47), இவருடைய மகள்களான ஷோபா குப்தா (26) மற்றும் ஆர்த்தி குப்தா (21) என்பது தெரியவந்தது. படுகாயமடைந்தவர்கள் சாவித்ரி குப்தாவின் கணவர், கார் டிரைவர் உள்பட 3 பேர் என்பதும் தெரியவந்தது.
மேலும், கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்த அவர்கள் மும்பைக்கு சென்று கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் நிப்பானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.