உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை செய்ததில் குளறுபடி
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் வரையறை செய்ததில் குளறுபடி நடந்து உள்ளது அதை சரி செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்த மறுவரையறையில் கருத்து தெரிவிக்க விருப்பம் உள்ளவர்கள் நேற்று மாலை வரை கருத்து தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்து இருந்தார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை செய்ததில் பல குளறுபடிகள் நடந்து உள்ளன என்று பல்வேறு அமைப்பினரும், பல்வேறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் ஏ.எல்.எஸ். லட்சுமணன், அவை தலைவர் சுப.சீத்தாராமன், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.எம்.சிவகுமார், சங்கரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான்மைதீன், மனித நேய மக்கள் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் ரசூல்மைதீன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரி செய்யவேண்டும். நெல்லை மாநகராட்சி பகுதியில் ஒரு வார்டை குறைத்து மற்ற வார்டுடன் சேர்த்து ஒரு மண்டலத்தில் உள்ளவர்களை மற்ற மண்டலத்தில் சேர்த்து உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. எனவே மீண்டும் மறுவரையறை செய்யவேண்டும். இது சம்பந்தமாக அந்த பகுதி மக்களிடமும், அரசியல் கட்சியினரிடமும் கருத்து கேட்கவேண்டும். இந்த மறுவரையறை செய்ய மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு வழங்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.
உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை செய்ததில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வேண்டும். இன்னும் கருத்துகேட்க கூடுதல் நாள் அவகாசம் அளிக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரசார் மாவட்ட தலைவர்கள் ஜோதி, சுத்தமல்லி முருகேசன், மாநில செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் தலைமையிலும், தே.மு.தி.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் முகமதுஅலி தலைமையிலும், ம.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையிலும், மனித நேய மக்கள் கட்சியினர் நிர்வாக குழு உறுப்பினர் ரசூல்மைதீன் தலைமையிலும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
நெல்லை மாநகராட்சி 5–வது வார்டு பொதுமக்கள் அ.தி.மு.க. தினகரன் அணி நிர்வாகி சுரேஷ்குமார் தலைமையிலும், நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை காமராஜர் தெரு மக்கள் திரண்டு வந்து 5–வது வார்டை மறுவரையறையில் சரியாக பிரிக்காமல் குளறுபடி செய்து விட்டனர். அதை சரியான முறையில் அந்த பகுதி மக்களிடம் கருத்துகேட்டு மறுவரையறை செய்யவேண்டும் என்று கூறி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் மேலப்பாளையம் 38–வது வார்டு மக்கள், பாளையங்கோட்டை 11–வது வார்டு மக்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களுடைய வார்டை பிரித்து வேறு மண்டலத்திற்கு மாற்றுவதால் நாங்கள் சிரமப்படுவோம் என்று கூறி மனு கொடுத்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலாபுரம் ஊர்மக்கள், கடையநல்லூர் பொதுமக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் லத்தீப் தலைமையிலும் வந்து மனு கொடுத்தனர்.