விவசாயி தம்பதியர் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.5 ஆயிரம் அபேஸ்


விவசாயி தம்பதியர் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.5 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:00 AM IST (Updated: 3 Jan 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் விவசாயி தம்பதியர் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.5 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விவசாயி கோவில்பட்டி அருகே ஆவல்நத்தத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி மாரியம்மாள்

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் விவசாயி தம்பதியர் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.5 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே ஆவல்நத்தத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி மாரியம்மாள் (60). இவர்கள் 2 பேருக்கும் கோவில்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் ரங்கசாமியின் செல்போனில் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், ‘கோவில்பட்டி வங்கியின் மண்டல மேலாளர் பேசுவதாகவும், ரங்கசாமி, மாரியம்மாளின் வங்கி ஏ.டி.எம். கார்டுகள் கடந்த ஆண்டுடன் காலாவதியாகி விட்டதாகவும், அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்காக தற்போது 2 பேரும் வைத்துள்ள ஏ.டி.எம். கார்டுகளின் வரிசை எண்கள், பாஸ்வேர்டு எண்களை கேட்டுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய ரங்கசாமியும் அனைத்து தகவல்களையும் கூறியுள்ளார். பின்னர், சிறிதுநேரத்தில் 2 பேரின் வங்கி சேமிப்பு கணக்குகளில் இருந்து தலா ரூ.2,500 எடுக்கப்பட்டதாக, அவர்களது செல்போன்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி நேற்று கோவில்பட்டியில் உள்ள வங்கியில் முறையிட்டார். உடனே அந்த 2பேரின் வங்கி கணக்குகளையும் ஊழியர்கள் ஆய்வு செய்த போது, ஆன்லைன் மூலம் மர்ம நபர் பணத்தை அபேஸ் செய்த விவரம் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த 2பேரின் ஏ.டி.எம் கார்டுகளையும் வங்கி ஊழியர்கள் முடக்கினர். மேலும், இதுபோன்ற மர்ம நபர்களின் செல்போன் அழைப்புகளுக்கு பதில் கூற வேண்டாம் என வங்கி தரப்பில், அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து ரங்கசாமி கொடுத்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் அந்த மர்ம நபர் மீண்டும் ரங்கசாமி சொல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவருடைய மற்ற வங்கி கணக்கு விவரங்கள் குறித்து அப்போது மர்மநபர் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர் வசைபாடியவுடன் மர்ம நபர் இணைப்பை துண்டித்து விட்டாராம். இதுகுறித்தும் ரங்கசாமி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அந்த மர்மநபர் தொடர்பு கொண்ட எண் குறித்து ஆய்வு செய்தபோது, ஆன்லைன் எண்ணாக இருப்பதாகவும், உடனடியாக அந்த எண் குறித்த விவரங்களை அறிய முடியவில்லை எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து அந்த எண் குறித்தும், மர்ம நபர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story