சந்திராபூரில் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து 35 கிராமங்கள் இருளில் மூழ்கின
சந்திராபூரில் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 35 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
சந்திராபூர்,
சந்திராபூரில் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 35 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
துணை மின் நிலையம்சந்திராபூர் வரோரா பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. துணை மின் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், அலறியடித்து கொண்டு வெளியேறினர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், விரைந்து வந்து மின் சப்ளையை துண்டித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக மெயின் நிலையத்துக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. நேற்று காலை வரை தீயை அணைக்கும் பணி நீடித்தது.
35 கிராமங்கள்கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் அணைத்த போதிலும், டிரான்ஸ்பார்ம்கள் வெடித்து சிதறியதை அவர்களால் தடுக்க முடியவில்லை. இதன் காரணமாக சந்திராபூரை சுற்றியுள்ள சுமார் 35 கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு, இருளில் மூழ்கின.
வரோரா துணை மின் நிலையத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்றும், இன்னும் 24 மணிநேரத்தில் நிலைமை சீரடைந்து கிராமங்களுக்கு மின்வினியோகம் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.