கமலா மில் தீ விபத்து காரணமாக புத்தாண்டு தினத்தன்று ஓட்டல் தொழில் பாதிப்பு ரூ.200 கோடி வருவாய் இழப்பு
கமலா மில் தீ விபத்து காரணமாக புத்தாண்டு தினத்தன்று ஓட்டல் தொழில் பாதிக்கப்பட்டு ரூ.200 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை,
கமலா மில் தீ விபத்து காரணமாக புத்தாண்டு தினத்தன்று ஓட்டல் தொழில் பாதிக்கப்பட்டு ரூ.200 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
களையிழந்த கொண்டாட்டம்மும்பை பரேல் கமலா மில் வளாகத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் கடந்த 29–ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 11 பெண்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மாநகராட்சியினர் விதிமுறை மீறி செயல்பட்ட ஓட்டல், விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தனர். சுமார் 400 ஓட்டல், விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. 29 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
மாநகராட்சிக்கு நடவடிக்கைக்கு பயந்த பல ஓட்டல் நிர்வாகங்கள் விதிமுறை மீறி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்தனர். இதேபோல கமலா மில் தீ விபத்து சம்பவத்தால் பொது மக்களில் பலரும் ஓட்டல், கேளிக்கை விடுதிக்கு சென்று புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்த்தனர். இதனால் இந்த ஆண்டு ஓட்டல், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது. வழக்கமாக புத்தாண்டின் போது கூட்டம் நிரம்பி விழியும் பல ஓட்டல்களில் குறைந்த அளவு வாடிக்கையாளர்களே இருந்தனர்.
ரூ.200 கோடி இழப்புஇதுகுறித்து மும்பை ஓட்டல் மற்றும் உணவு விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர் திலீப் தத்வானி கூறும்போது:–
வழக்கமாக புத்தாண்டின் போது ரூ.450 கோடிக்கு ஓட்டல் தொழில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ரூ.250 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டல்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததும், பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.