கவுரவ பெண் விரிவுரையாளர் பணிநீக்கம் ‘திடீர்’ தர்ணா போராட்டம்
சேலம் அரசு மகளிர் கல்லூரி கவுரவ பெண் விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார்.
சேலம்,
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ராதா(வயது33). இவர், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அவர் மீது கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. மேலும் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சமீபத்தில், மண்டல இணை இயக்குனர் நேரடியாக கவுரவ விரிவுரையாளர் ராதாவிடம் விசாரணை நடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கவுரவ விரிவுரையாளர் ராதாவை பணியில் இருந்து விடுவித்து(பணிநீக்கம்) உத்தரவிட்டார். கல்லூரி நிர்வாகம் தரப்பில், கன்னங்குறிச்சி போலீஸ் மூலமாக ராதா பணிநீக்க தகவலை அவரிடம் தெரிவித்து நேற்று கல்லூரியை விட்டு வெளியேற செய்தனர்.
அதைத்தொடர்ந்து பிற்பகலில் சேலம் கலெக்டர் அலுவலகம் வந்த ராதா, அங்கு கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தன்னிடம் கூடுதல் வேலைகொடுத்து கல்லூரி நிர்வாகம் தொந்தரவு செய்தனர் என்றும், அதை எதிர்த்து கேள்வி எழுப்பியதால் பழிவாங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
சேலம் டவுன் போலீசார் அவரிடம் சமாதானம் பேசி, கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்திக்க ஏற்பாடு செய்தனர். அங்கு நேர்முக உதவியாளர் விஜய்பாபுவை சந்தித்து மனுகொடுத்து விட்டு ராதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.