மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.
மதுரை,
மதுரை மாநகரின் மையப்பகுதியான விளக்குத்தூண் பகுதியில் மொத்தம் மற்றும் சில்லரை முறையில் விற்பனை செய்யும் ஏராளமான துணிக்கடைகள் உள்ளன. இதில் பத்துதூண் சந்து பகுதியில் மஞ்சனக்காரத் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார்.
இந்தக் கடையின் கீழ் தளத்தில் சில்லரை விற்பனை பகுதியும், மேல்தளத்தில் மொத்த விற்பனை பகுதி மற்றும் கிட்டங்கியும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கணேசன் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கடையின் மேல் தளத்தில் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது.
அப்போது அருகில் குடியிருந்தவர்கள் உடனே போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு திடீர்நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கடை பகுதி வரை வண்டியை கொண்டு செல்ல முடியவில்லை. மிகவும் குறுகலான பகுதியில் கடை இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு தீயை அணைத்தனர். ஆனால் கடையின் மேல் தளத்தில் இருந்து கீழ் தளத்துக்கும் தீ பரவியது.
அதனால் தீயின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததால், தல்லாகுளம், அனுப்பானடி உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் சேர்ந்து தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக மாநகராட்சி லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சுமார் 8 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தினால் துணிக்கடை அமைந்துள்ள கட்டிடத்தின் பல பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அந்த கடையின் அருகில் வசிப்பவர்கள் மற்றும் கடை வைத்திருப்பவர்களை உடனே அங்கிருந்து வெளியேறும்படி போலீசார் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.
இது குறித்து கடை உரிமையாளர் கணேசன் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மின் கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.