நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளிடம் தகராறு செய்த தி.மு.க. பிரமுகர் கைது
நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளிடம் தகராறு செய்த தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை அருகே உள்ள கூவனூத்து ஊராட்சி கே.குரும்பபட்டியை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 40). இவர் கூவனூத்து தி.மு.க. ஊராட்சி கழக செயலாளராக உள்ளார். அவருடைய மனைவி கவிதா. இவர் முன்னாள் கூவனூத்து ஊராட்சி தலைவராக இருந்தார். கார்மேகம் தனது மனைவி பதவியில் இருந்தபோது அப்பகுதியில் குடிநீர் வசதிக்காக சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைத்ததாக கூறப்படுகிறது.
இதற்குரிய பணத்தை ஊராட்சி நிதியில் இருந்து எடுத்துகொள்ளவில்லை என தெரிகிறது. இதற்கான பணத்தை வசூலிக்க ஒன்றிய அலுவலகத்துக்கு கார்மேகம் காரில் சென்றார். பின்னர் காரை ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நிறுத்திவிட்டு அதிகாரிகளிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.
அப்போது அதிகாரிகள் விசாரித்துவிட்டு பணம் தருவதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கார்மேகம் ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நின்று கொண்டு தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லெட்சுமி கலா, நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புச்சாமி வழக்குப்பதிவு செய்து கார்மேகத்தை கைது செய்தார். மேலும் காரையும் பறிமுதல் செய்தார்.