வார்டு சீரமைப்பு பட்டியலை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்த தி.மு.க. முடிவு
உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழக தேர்தல் ஆணையம் வார்டு சீரமைப்பு பட்டியலை வெளியிட்டு உள்ளது.
குன்னூர்,
வார்டு சீரமைப்பு பட்டியல் குறித்து நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் கூறியதாவது:–
உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழக தேர்தல் ஆணையம் வார்டு சீரமைப்பு பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த சீரமைப்பு பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. எவ்வாறு எனில் வாக்காளர் ஒருவர் வசிப்பிடம் ஒரு வார்டாகவும், வாக்கு உள்ள இடம் மற்றொரு வார்டாகவும் உள்ளது. மேலும் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வார்டிலும் அவரது வாக்குச்சாவடி வேறு வார்டிலும் உள்ளது. இதன் காரணமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள் பாஸ்போர்ட் எடுப்பதற்கும் முடியாத நிலை உள்ளது. ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றில் விலாசம் மாறி இருப்பதால் பாஸ்போர்ட் பெற சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த வார்டு சீரமைப்பு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்று நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். தவறும் பட்சசத்தில் தலைமை கழகத்தின் அனுமதியின் பேரில் வார்டு சீரமைப்பு பட்டியலை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.