கூடலூரில் மின்மோட்டார்கள் திருடிய வடமாநில வாலிபர் கைது
கூடலூரில் மின்மோட்டார்கள் திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்,
கூடலூர் முதல் மைல் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் தனது கிணற்றில் இறைப்பதற்காக வைத்திருந்த 2 மின் மோட்டார்கள் திருட்டு போனதாக கூடலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கூடலூர் பஸ் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு பிரமோத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தேவர்சோலை சாலையில் நடந்து சென்ற ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இந்தி மற்றும் தமிழ் மொழியில் கலந்து பேசினார். இதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நாகலாந்து எஸ்டேட் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 27) என்பதும், வடமாநிலத்தில் இருந்து பிழைப்பு நடத்துவதற்காக கூடலூர் வந்த போது தங்கவேல் வீட்டில் வைத்திருந்த 2 மின்மோட்டார்களை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கூடலூர் அருகே பாடந்தொரை தைதமட்டம் பகுதியில் மறைத்து வைத்திருந்த 2 மின்மோட்டார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கூடலூர் கோர்ட்டில் கவுதமை போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, அடையாளம் தெரியாத நபர்களை பொதுமக்கள், வணிகர்கள் வேலைக்கு அமர்த்த வேண்டாம். வடமாநில ஆசாமிகளால் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதேபோல் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு பொதுமக்கள் கொடுத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.