மகேஸ்வரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


மகேஸ்வரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 4 Jan 2018 4:15 AM IST (Updated: 4 Jan 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே மகேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆனைகட்டி கொல்லையில் மகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மிகப்பெரிய உண்டியல் ஒன்று கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த வைகாசி விசாகத் திருவிழாவின்போது, உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டு, உண்டியல் மீண்டும் பூட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலின் பூசாரி தட்சிணாமூர்த்தி என்பவர் கோவிலை பூட்டியுள்ளார். கோவிலின் அருகே குடியிருக்கும் அவர், இரவு 10.30 மணி அளவில் மீண்டும் ஒருமுறை கோவிலை சுற்றி பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார்.

உண்டியல் உடைப்பு

இந்நிலையில் கோவில் பூசாரி தட்சிணாமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து கோவிலில் போடப்பட்டிருந்த விளக்குகளை அணைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் சற்று தூரத்தில் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. மேலும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் கொள்ளை போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் இதுகுறித்து நாகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கோவில் அருகே கிடந்த உண்டியலை கைப்பற்றினர். உண்டியலில் இருந்து சுமார் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அறந்தாங்கி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story