படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் பிணமாக மீட்பு மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம்


படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் பிணமாக மீட்பு மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 4 Jan 2018 2:00 AM IST (Updated: 4 Jan 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து படகில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர், பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடியில் இருந்து படகில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர், பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

ஆண் பிணம்

காயல்பட்டினம் சிங்கித்துறை கடற்கரையில் இருந்து சிறிது தொலைவில் கடலில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதந்தது. நேற்று காலையில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், இறந்தவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்துக்கும், கூடங்குளம் கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீன்பிடிக்க சென்ற மீனவர்

போலீசாரின் விசாரணையில், இறந்தவர் தூத்துக்குடி தருவைக்குளத்தைச் சேர்ந்த மீனவரான அந்தோணி முத்து (வயது 45) என்பதும், இவர் கடந்த 30–ந்தேதி தருவைக்குளத்தில் இருந்து நாட்டுப்படகில் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, படகில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது.

அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இறந்த அந்தோணி முத்துவுக்கு கவிதா (39) என்ற மனைவியும், அனுசியா (22), அஜிதா (15) ஆகிய 2 மகள்களும், ரஞ்சித்குமார் (20), ராஜேஷ் (18) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.


Next Story