பெண்ணாடம் அருகே பள்ளிக்கூடத்தில் பணம், மடிக்கணினிகள் திருட்டு
பெண்ணாடம் அருகே பள்ளிக்கூடத்தில் பணம், மடிக்கணினிகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள இறையூரில் அரசு உதவிபெறும் அருணா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் கோபி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, பெண்ணாடத்தை சேர்ந்த காவலாளி மணிகண்டன் என்பவர் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்த போது, தனது அறையின் கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் கோபி, பள்ளிக்கூடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது அலுவலகத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 2 மடிக்கணினிகள், கண்காணிப்பு கேமராக்கள், பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம், ஒரு கிலோ வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்–இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பள்ளிக்கூட காவலாளி மணிகண்டன் அவரது அறையில் தூங்கியதை மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் அவரது அறையின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு, பள்ளிக்கூட அலுவலகத்தின் அறை கதவை உடைத்து வெள்ளி நகைகள், கண்காணிப்பு கேமராக்கள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. திருடுப்போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது பள்ளிக்கூட அலுவலகத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி விளையாட்டு மைதானம், தொளர் கைகாட்டி பஸ்நிறுத்தம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் கோபி, பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.