குறைந்தபட்ச ஊதிய சட்ட அரசாணைப்படி தினக்கூலி வழங்க வேண்டும் துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
குறைந்தபட்ச ஊதிய சட்ட அரசாணைப்படி தினக்கூலி வழங்க வேண்டும் என்று துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் 80–க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 14 ஊராட்சிகள், 42 பேரூராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்ட அரசாணைப்படி தினக்கூலி வழங்கவேண்டும்.
அதன்படி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.624–ம், நகராட்சிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.509–ம், ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிபவர்களுக்கு ரூ.355–ம், பேரூராட்சிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.432–ம் வழங்கவேண்டும். இதேபோல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தினக்கூலியாக ரூ.432–ம் வழங்கவேண்டும்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த அனைவரையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த மனுக்களில் அவர்கள் கூறி இருந்தனர்.