மல்பே துறைமுகத்தில் நின்றிருந்த படகில் பயங்கர தீ; 5 மீனவர்கள் உயிர் தப்பினர்
மல்பே துறைமுகத்தில் நின்றிருந்த படகில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்த போது திடீரென்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
மங்களூரு,
மல்பே துறைமுகத்தில் நின்றிருந்த படகில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்த போது திடீரென்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 5 மீனவர்கள் உயிர் தப்பினர். தீயில் எரிந்து படகு பலத்த சேதமடைந்தது.
படகில் தீப்பிடித்ததுஉடுப்பி அருகே மல்பே பகுதியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான படகுகளில் கடலுக்குள் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவது வழக்கம். அதேப் போல் நேற்று முன்தினம் மாலை ஏராளமானோர் படகுகளில் மீன்பிடித்து வந்தனர். பின்னர் துறைமுகத்தில் நங்கூரத்தில் கயிற்றால் கட்டி படகுகளை நிலை நிறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் கரையோரம் நிறுத்தப்பட்டு இருந்த ‘இமாலயா‘ என்ற ஒரு படகில் மீனவர்கள் 5 பேர் சமையல் செய்து கொண்டிருந்தனர். அதாவது மண்எண்ணெய் அடுப்பில் அவர்கள் சமையல் செய்தனர். அந்த சமயத்தில் திடீரென்று மண்எண்ணெய் அடுப்பில் பற்றிய தீ, படகில் பிடித்தது.
5 மீனவர்கள் உயிர்தப்பினர்இந்த தீ படகு முழுவதும் பிடித்து பயங்கரமாக எரியத் தொடங்கியது. இதனால் சமையல் செய்துகொண்டிருந்த 5 மீனவர்களும் அலறியடித்துக் கொண்டு தப்பி ஓடி உயிர்பிழைத்தனர். இதுபற்றி மல்பே போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, படகில் பிடித்த தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர்.
இருப்பினும் தீவிபத்தில் படகு பலத்த சேதமடைந்தது. இதுதொடர்பாக மல்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.