புதிய பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட மேலானதாக இருக்கும் அமைச்சர் தகவல்


புதிய பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட மேலானதாக இருக்கும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட மேலானதாக இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களான நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி வைர விழா, மகாலிங்கம் என்ஜினீயரிங் தொழில் நுட்பக்கல்லூரியின் 20-ம் ஆண்டு விழா, வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தின் 10-ம் ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் முக்கிய நிகழ்ச்சியாக கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 நாள் அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி பொள்ளாச்சியில் உள்ள உடுமலை நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு மையத்தில் நேற்று தொடங்கியது.

இதன் தொடக்க விழாவுக்கு என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சி.ராமசாமி வரவேற்று பேசினார். கண்காட்சி அரங்கை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி திறனில் (ஜி.டி.பி.) மராட்டிய மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளது. இதில் குஜராத் மாநிலம் தமிழ்நாட்டை பிடிக்க இன்னும் 25 ஆண்டுகள் ஆகும். தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையின் காரணமாக பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறேன்.

இந்த புதிய பாடத்திட்டமானது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட மேலான பாடத்திட்டமாக இருக்கும். இந்த புதிய பாடத்திட்டத்தில் 72 பாடங்கள் தொழில் கல்வி சார்ந்த பாடங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

எதிர்காலத்தில் சிறந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது தான் இந்த அரசின் நோக்கமாகும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளை துறைக்கு 25 மாணவர்கள் வீதம் 100 பேரை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து, அங்குள்ள கற்றல் அனுபவங்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் வழிகல்வியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 960 பேருக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது, ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு அந்த மாணவர்கள் பொதுத்தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம், தேசிய, மாநில, மண்டல அளவில் கலை, இலக்கியம், விளையாட்டு திறன் அடிப்படையில் பெறும் மதிப்பெண்களில் 40 சதவீதம் கணக்கிடப்படும். மேலும் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் இயற்கையை பாதுகாக்க பொதுஇடங்களில் 5 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். இதற்காக மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொள்ளாச்சி ஜெயராமன்- உடுமலை ராதாகிருஷ்ணன்

விழாவில் சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார். அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு, வேளாண்மை கல்வி நிறுவன முதல்வர் பாலுசாமி, என்.ஐ.ஏ. பள்ளிகளின் நிர்வாக அதிகாரி சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன் நன்றி கூறினர். கண்காட்சியில் கோவை, திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 115 அறிவியல் படைப்புகளையும், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 230 படைப்புகளையும் வைத்திருந்தனர். 

Next Story