மீன்பிடிக் சென்றபோது படகிலிருந்து தவறி விழுந்த மேலும் ஒரு மீனவர் பிணமாக மீட்பு
தூத்துக்குடியிலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்றபோது, படகில் இருந்து தவறி விழுந்த மேலும் ஒரு மீனவர் காயல்பட்டினம் சிங்கித்துறை கடல் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடியிலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்றபோது, படகில் இருந்து தவறி விழுந்த மேலும் ஒரு மீனவர் காயல்பட்டினம் சிங்கித்துறை கடல் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். இது மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலில் ஆண் பிணம்காயல்பட்டினம் சிங்கித்துறையில் இருந்து நேற்று காலையில் மீனவர்கள் நாட்டுப்படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடற்கரையில் இருந்து சுமார் 20 கடல்மைல் தொலைவில் கடலில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதந்தது. இதனைப் பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து கடற்கரையில் உள்ள மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே 2 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று, அங்கு பிணமாக மிதந்தவரின் உடலை படகில் ஏற்றி, கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்துக்கும், கூடங்குளம் கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அடையாளம் தெரிந்ததுபோலீசாரின் விசாரணையில், இறந்தவர் தூத்துக்குடி திரேஸ்புரம் தோமையார் கோவில் தெருவைச் சேர்ந்த மரிய பிராந்தன் (வயது 56). மீனவர். இவர் கடந்த 30–ந்தேதி திரேஸ்புரத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றபோது, படகில் இருந்து தவறி விழுந்து இறந்ததும்’ தெரிய வந்தது. அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இறந்த மரிய பிராந்தனுக்கு ஜெசிந்தா என்ற மனைவியும், விண்ணொளி, ஜேஸ்மின், ஈக்குலிஸ்டா, காருண்யா ஆகிய 4 மகள்களும், அந்தோணி என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 30–ந்தேதி தருவைக்குளத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றபோது, படகில் இருந்து தவறி விழுந்து இறந்த அந்தோணி முத்துவின் (45) உடல் நேற்று முன்தினம் இதேபோன்று காயல்பட்டினம் சிங்கித்துறை கடலில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கடலில் தொடரும் இந்த துயர சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.