தனிவார்டுகள் குறைப்பு எதிரொலி: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


தனிவார்டுகள் குறைப்பு எதிரொலி: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

அம்மூர் பேரூராட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் 3-ல் இருந்து 1 ஆக குறைக்கப்பட்டதை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

அம்மூர் பேரூராட்சியில் 1-வது வார்டு (நரசிங்கபுரம் பகுதி), 3-வது வார்டு (மேட்டுக்காலனி பகுதி), 4-வது வார்டு (அம்மூர் கூட்ரோடு பகுதி) ஆகியவை தாழ்த்தப்பட்டோருக்கான தனி வார்டாக இருந்தன. மறுசீரமைப்பின் போது அம்மூர் பேரூராட்சியில் உள்ள வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

தனிவார்டாக இருந்த 4 மற்றும் 1-வது வார்டுகள் நீக்கப்பட்டு அவை அருகில் உள்ள மற்ற வார்டுகளில் இணைக்கப்பட்டுள்ளது. 3-வது வார்டு மட்டும் தற்போது 13-வது வார்டாக தாழ்த்தப்பட்டோருக்கான தனி வார்டாக ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே தாழ்த்தப்பட்டோர் அதிகமாக வாழும் பகுதிகள் மற்ற பகுதிகளோடு இணைக்கப்பட்டதை கண்டித்தும், தாழ்த்தப்பட்டோருக்கு இருந்த 3 வார்டுகள் ஒன்றாக குறைக்கப்பட்டதை கண்டித்தும் நேற்று அம்மூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மாணவர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் தினேஷ் மற்றும் சிட்டிபாபு, நரசிம்மன், விக்னேஷ்வரன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணனிடம் வழங்கினர்.

பொதுமக்கள் அம்மூர் பேரூராட்சியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story