கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 239 பேர் கைது


கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 239 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2018 4:45 AM IST (Updated: 5 Jan 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பிரேமலதா விஜயகாந்த் உள்பட 239 பேர் கைது செய்யப்பட்டனர். தொண்டர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பும் தே.மு.தி.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். அதன்படி நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை முன்பு பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.

நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிவக்கொழுந்து கண்டன முழக்கங்களை வாசிக்க அதனை பிரேமலதா விஜயகாந்தும், தொண்டர்களும் திரும்ப கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

தே.மு.தி.க. என்றைக்குமே விவசாயிகளின் தோழன். கரும்புக்கு நிலுவைத்தொகை வழங்காத 42 சர்க்கரை ஆலைகளை கண்டித்து இன்று(அதாவது நேற்று) முற்றுகை போராட்டம் நடக்கிறது.

இன்றைக்கு யாரெல்லாமோ அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் விஜயகாந்தின் படைக்கு இணையான படை தமிழகத்தில் இல்லை. வெகுவிரைவில் தமிழகத்தில் விஜயகாந்த் ஆட்சி அமைப்பது உறுதி.

நான் நேற்று கன்னியாகுமரிக்கு சென்றிருந்தேன். கன்னியாகுமரியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பல்லாயிரம் மீனவர்களை காணவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் நாளை(அதாவது இன்று) கடிதம் எழுத உள்ளார். டாஸ்மாக் மதுவிற்பனை ஒன்றில் தான் தமிழ்நாடு முன்னேறியுள்ளதே தவிர வேறெதிலும் முன்னேறவில்லை.

தமிழகத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் 1,384 கோடி ரூபாயும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 218 கோடி ரூபாயும் என மொத்தம் 1,602 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வைத்து உள்ளன. இந்த சர்க்கரை ஆலைகளை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். அரசாங்கம் நினைத்தால் எல்லா ஆலைகளையும் லாபத்தில் இயங்க வைக்க முடியும். ஆனால் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் தங்கள் சுயநலத்துக்கும் தான் பயன்படுத்துகிறார்களே தவிர விவசாயிகளுக்கு எதுவும் செய்கிறதாக தெரியவில்லை.

இந்த அரசு தினம் ஒரு நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறது. இது போதாதென்று இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வாங்க. எங்களுக்கு அதுபற்றி பிரச்சினை இல்லை. ஆனால் விஜயகாந்தை மாதிரி தைரியமாக களத்தில் இறங்கி மக்களுக்காக போராடக்கூடிய வீரராக வர வேண்டும். அதைவிட்டு விட்டு மைக்கை பார்த்தாலே பயமாக இருக்கிறது. பத்திரிகையாளர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது, கொள்கை என்னவென்று கேட்டாலே தலை சுற்றுகிறது என்கிறவங்க நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டியது தானே?

வீட்டுக்குள் ஒரு ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு டிவிட்டரில் ஆட்சி செய்ய முடியாது. உங்களை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கும் வரை தே.மு.தி.க. போராட்டம் ஓயாது. நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் சர்க்கரை ஆலையில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக சாலைக்கு வந்தார். அப்போது அவரை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் பிரேமலதாவுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் மனு கொடுக்க போகிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மனுகொடுக்க நீங்கள் உள்பட 5 பேர் மட்டும் செல்லலாம் என்று போலீசார் கூறியதை ஏற்க மறுத்த பிரேமலதா விஜயகாந்த், தன்னுடன் தொண்டர்கள் அனைவரும் வர அனுமதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு போலீசார் மறுத்ததால், போலீசாரை கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர். இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அவருடன் தொண்டர்களும் சாலையில் அமர்ந்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

தொண்டர்களை விரட்டியடித்தனர்

ஆனால் வாகனத்தை நகர்த்த முடியாத படி தொண்டர்கள் வாகனத்தின் முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். பிறகு அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அவரை போலீசார் அழைத்து சென்று காவலில் வைத்தனர். பிரேமலதா விஜயகாந்த் உள்பட 239 பேர் கைதானார்கள்.


Next Story