நெல்லையில், பட்டப்பகலில் பயங்கரம்: ரியல் எஸ்டேட் உரிமையாளர் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை
நெல்லையில், பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டது.
நெல்லை,
நெல்லையில், பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டது. இந்த கொலைக்கு தொழில் போட்டி காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரியல் எஸ்டேட் உரிமையாளர்நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்கிற மோட்டார் முருகன்(வயது 45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கமிஷன் அடிப்படையில் மணல் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். தினந்தோறும் காலையில் இவர் நெல்லைக்கு வந்து, ரியல் எஸ்டேட் தொடர்பான நண்பர்களை பார்த்து விட்டு இரவில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
வழக்கம்போல் நேற்று காலையில் இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு வந்தார். அங்குள்ள நண்பர்களை பார்த்து விட்டு வேறு நண்பரை சந்திக்க சென்று கொண்டு இருந்தார். இலந்தகுளம் ரோட்டில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல், முருகனை பின்தொடர்ந்து வந்தது. அந்த கும்பல் முருகனை வழிமறித்து நிறுத்தி பேசினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அரிவாளால் வெட்டிக்கொலைஇதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த காயங்களுடன் முருகன் அந்த கும்பலிடம் இருந்து உயிர் தப்பித்து ஓட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டிச்சென்று வழிமறித்து சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பிச்சென்றது. அந்த கும்பல் வெட்டியதில் முருகனின் தலை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதால், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முருகன் பிணமானார்.
இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங், பாளையங்கோட்டை உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொழில் போட்டியா?இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டியின் காரணமாக இந்த கொலை நடந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனுக்கும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் முருகன் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளார்.
அவர், பாளையங்கோட்டை செல்வதை நோட்டமிட்ட அந்த கும்பல் பின்தொடர்ந்து வந்து அவரை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
மற்றொரு கோணத்திலும்...கங்கைகொண்டானில் கடந்த 2010–ம் ஆண்டு நடந்த ஒரு கொலையில் உய்க்காட்டான் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உய்க்காட்டான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு காரணம் முருகன் தான் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர். எனவே அவர்கள், முருகனை கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.