போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அரசு பஸ்சை அந்தியூர் எம்.எல்.ஏ. ஓட்டிச்சென்றதால் பரபரப்பு
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பஸ்சை அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் 36 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர்,
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து போக்குவரத்துக்கழக பணிமனைகளிலும் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலைக்கு தீர்வு காணும் வகையில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் பணிமனைகள் மற்றும் பஸ்நிலையங்களை பார்வையிட்டனர். ஈரோட்டில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் பணிமனைகளை பார்வையிட்டு அங்கு வந்திருந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை பஸ்களை இயக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இதுபோல் அந்தியூர் தொகுதியிலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜா கிருஷ்ணன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று போக்குவரத்தை பார்வையிட்டார். அவர் அந்தியூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறித்து கேட்டார். அப்போது டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் யாரும் பணிக்கு வராததால் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. திடீரென்று அந்தியூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு வந்தார். வழக்கமாக வேட்டி–சட்டையுடன் வரும் அவர் காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் வந்திருந்தார். அவர் நேராக பணிமனை மேலாளர் அலுவலகத்துக்கு சென்றார். பொதுமக்களுக்காக நான் பஸ் ஓட்டப்போகிறேன் என்று அவர் கூறினார். எம்.எல்.ஏ. பஸ் ஓட்டப்போகிறேன் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்த கிளை மேலாளர் சற்று தயங்கினார். ஆனால் எம்.எல்.ஏ. கையோடு கொண்டு வந்திருந்த அவருடைய கனரக வாகன ஓட்டுனர் உரிமத்தை கிளை மேலாளரிடம் காட்டி, ஒப்புதல் பெற்றார்.
அதைத்தொடர்ந்து அங்கு நின்றிருந்த ஒரு பஸ்சில் ஏறினார். அது புறநகர் பேருந்து. ஆனால் டவுன் பஸ் மாற்றுப்பேருந்தாக மாற்றப்பட்டு, பவானி செல்ல பெயர் பலகை மாட்டப்பட்டது.
எம்.எல்.ஏ. உற்சாகமாக டிரைவர் இருக்கைக்கு சென்று உட்கார்ந்து, எந்த சிரமமுமின்றி பஸ்சை இயக்கினார். பஸ் நிலையத்துக்கு சென்றபோது, பவானி செல்ல காத்திருந்த பயணிகள் திபு திபுவென பஸ்சில் ஏறினார்கள். பஸ்சில் கண்டக்டராக வழக்கமாக செல்லும் சரவணன் இருந்தார். அவர் வழக்கம்போல டிக்கெட்டுகளை கொடுத்தார். அப்போது பஸ்சை ஓட்டுவது இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. என்ற தகவலை அறிந்து பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த பஸ்சில் 40 பேர் பயணம் செய்தனர். கண்டக்டர் விசில் கொடுத்த இடங்களில் எல்லாம் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி, சாதாரண டிரைவர் போன்று எம்.எல்.ஏ. பஸ்சை இயக்கினார்.
18 கி.மீ. தூரம் கடந்து பஸ் பவானியை சென்று அடைந்தது. பவானி பஸ்நிலையத்தில் இருந்து மீண்டும் 28 பயணிகளை ஏற்றிக்கொண்டு அவர் அந்தியூர் நோக்கி பஸ்சை ஓட்டிச்சென்றார்.
இதற்கிடையே எம்.எல்.ஏ. அரசு பஸ்சை அந்தியூரில் இருந்து பவானிக்கும், பவானியில் இருந்து அந்தியூருக்கும் 36 கி.மீ. தூரம் ஓட்டி வந்த தகவல் அந்தியூர் முழுக்க பரவியது. இது தி.மு.க. மற்றும் பிற தொழிற்சங்கத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்த அந்தியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் அந்தியூர் பஸ்நிலையத்தில் குவிந்தனர். இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. ஓட்டி வந்த பஸ் மாலை 4.30 மணிக்கு பஸ்நிலைய நுழைவுவாயில் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் பஸ்சை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக டிரைவர் இருக்கையில் இருந்து எம்.எல்.ஏ. இறங்கி வந்தார். பயணிகளும் இறங்கினார்கள். இதற்கிடையே சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பஸ் ஊழியர்களின் போராட்டத்தை சிதைக்கும் வகையில் ஒரு எம்.எல்.ஏ. பஸ் இயக்குவது கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் எதிர்க்கிறோம். எனவே அவர் பஸ் ஓட்டக்கூடாது என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். உடனடியாக போராட்டமும் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தியூர் பஸ் நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது, ‘அந்தியூர் பணிமனையில் இருந்து 77 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 31 பஸ்களை வழக்கம்போல டிரைவர் –கண்டக்டர்கள் இயக்கினார்கள். மீதமுள்ள 46 பஸ்களும் பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்தன. எம்.எல்.ஏ. அவரது ஓட்டுனர் உரிமத்தை காட்டி அனுமதி பெற்று பஸ் இயக்கினார்’ என்றார்கள்.