கோவை அச்சகம் இடமாற்றம்: தமிழகத்தின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது வைகோ பேட்டி


கோவை அச்சகம் இடமாற்றம்: தமிழகத்தின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது வைகோ பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2018 4:45 AM IST (Updated: 6 Jan 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள அச்சகத்தை இடமாற்றம் செய்வது என்று ஒவ்வொன்றாக தமிழகத்தின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது என்று கோவையில் வைகோ கூறினார்.

கோவை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கோவை மாநகராட்சி இதுவரை இல்லாத அளவுக்கு சொத்து வரி, குப்பை வரி, குடிநீர் வரி என வரியை உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் அல்லல்படுகிறார்கள். இந்த வரி விதிப்புக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது ம.தி.மு.க.தான். அதன்பிறகு அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் எந்த பலனும் இல்லை.

கோவையில் புதிய வரி விதிப்புக்கு எதிராக ம.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி உத்தரவுபடி வழக்கு தொடர்பாக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்தனர். அதன்பிறகும் மக்களை பற்றி மாநகராட்சி நிர்வாகம் கவலைப்படுவதாக இல்லை. இது கண்டனத்துக்குரியது. வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

கோவை பிரஸ் காலனியில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை நாசிக்குக்கு இடம் மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. லாபகரமாக இயங்கி கொண்டு இருக்கும் அச்சகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். முதல்–அமைச்சரும் கடிதம் எழுதி உள்ளார். அச்சகத்தை இடமாற்றம் செய்வது கண்டத்துக்குரியது.

தமிழகத்தின் உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை ஒவ்வொன்றாக பறிக்கும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது. எல்லாவற்றையும் ஒற்றைப்படுத்துதல் என்ற மத்திய அரசின் பாசிச வேலை கவலை தருகிறது. இந்திய மருத்துவ கவுன்சிலை பாழாக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. அதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தமிழக அரசு அடக்குமுறையை கையாளாமல் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story