சாத்தான்குளத்தில் துணிகரம் ஆசிரிய தம்பதி வீட்டில் பூட்டை உடைத்து நகைகள்– பணம் கொள்ளை
சாத்தான்குளத்தில் ஆசிரிய தம்பதி வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளத்தில் ஆசிரிய தம்பதி வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை பற்றிய விவரம் வருமாறு:–
ஆசிரிய தம்பதிசாத்தான்குளம் தட்டார் மேல தெருவைச் சேர்ந்தவர் பதுவை துரை (வயது 37). இவர் சாத்தான்குளம் அருகே பனைவிளையில் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மெல்வின் (35). இவர் சாத்தான்குளத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
பதுவை துரை, பள்ளிக்கூடத்தில் விடுமுறை எடுத்து விட்டு, சாத்தான்குளம் வடக்கு பள்ளிவாசல் தெருவில் புதிதாக வாங்கிய வீட்டை புதுப்பிக்கும் பணியை பார்வையிட சென்றார்.
நகைகள், பணம் திருட்டு
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நைசாக பதுவை துரையின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த அலமாரியை திறந்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.
மதியம் மெல்வின் தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததையும், அலமாரியில் இருந்த நகைகள், பணம், செல்போன் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் தம்பதியின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம், செல்போனை திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சாத்தான்குளத்தில் பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.