பெரியநாயக்கன்பாளையம் அருகே செயல்படும் அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் 148 பேர் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே செயல்படும் அச்சகத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெ.நா.பாளையம்,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ்காலனியில் மத்திய அரசின் அச்சகம் உள்ளது. இந்த அச்சகத்தை மூடிவிட்டு மராட்டிய மாநிலம் நாசிக்கிற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சக தொழிலாளர்கள் தொழிற் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், வணிகர்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் நேற்று காலை 11 மணி அளவில் அச்சகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு அச்சகத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவை– மேட்டுப்பாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்பட 148 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், வெ.ஆறுச்சாமி, தி.மு.க. சார்பில், சி.ஆர்.ராமச்சந்திரன், அ.அறிவரசு, காங்கிரஸ் கட்சி சார்பில் சின்னராஜ், கோவிந்தராஜ். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆறுமுகம், சிவசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடராஜ் பாலமூர்த்தி மற்றும் தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.