போத்தனூர்–பொள்ளாச்சி அகல ரெயில் பாதை மின்மயமாக்கப்படுகிறது


போத்தனூர்–பொள்ளாச்சி அகல ரெயில் பாதை மின்மயமாக்கப்படுகிறது
x
தினத்தந்தி 8 Jan 2018 4:15 AM IST (Updated: 8 Jan 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

போத்தனூர்–பொள்ளாச்சி ரெயில் பாதை மின்மயமாக்கப்படுகிறது. இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை,

கோவையை அடுத்த போத்தனூர்–பொள்ளாச்சி இடையேயான 42 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதை பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் நிறைவு பெற்றது. அதன் பின்னர் அந்த ரெயில்பாதையில் புதிய ரெயில்கள் விடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக கோவை–பொள்ளாச்சி இடையே புதிய ரெயில் பாதையில் ஒரு ரெயில் மட்டும் இயக் கப்பட்டு வருகிறது. அதில் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணம் செய்கிறார்கள். இதனால் அந்த ரெயில் தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

போத்தனூர்–பொள்ளாச்சி ரெயில் பாதையின் இரண்டு பக்கமும் சில இடங்களில் பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதால் அந்த பகுதிகளில் பக்கவாட்டு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகு தான் இரவு நேர ரெயில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த பாதையில் டீசல் என்ஜின் இணைக்கப்பட்ட ரெயில் தான் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போத்தனூர்–பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல்– பழனி– பொள்ளாச்சி– பாலக்காடு அகல ரெயில் பாதையை மின்மயமாக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக அந்த பாதையில் ஆய்வு நடத்தி எவ்வளவு செலவு ஆகும் என்பது பற்றி டெண்டர் சமர்ப்பிக்க தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி போத்தனூர்–பொள்ளாச்சி இடையேயான 42 கிலோ மீட்டர் தூரம் மற்றும் திண்டுக்கல் –பழனி– பொள்ளாச்சி– பாலக்காடு இடையே 206 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்மயமாக்குவதற்கான செலவுத்தொகை, திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தற்போது நாடு முழுவதும் மின்மயமில்லாத ரெயில் பாதையை மின்சார மயமாக்க ரெயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரெயில் என்ஜினில் டீசல் பயன்பாட்டை குறைக்க ரெயில் பாதை மின்மயமாக்கல் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது போத்தனூர் –பொள்ளாச்சி அகல ரெயில்பாதை மின்மயமாக்கப்பட உள்ளது. டெண்டர் கோரப்பட்டு முடிவான பின்னர் 2 ஆண்டுகளில் ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story