ராணுவ தளவாடங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு


ராணுவ தளவாடங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு
x
தினத்தந்தி 8 Jan 2018 4:45 AM IST (Updated: 8 Jan 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

கோவையில், ராணுவ தளவாடங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோவை வந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

கோவை,

மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது மத்திய மந்திரியிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:–

கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மட்டுமின்றி தொழிற்துறையில் வளர்ச்சி அடைந்து வர்த்தக ரீதியாக முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியில் கோவை முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கு ஜவுளி எந்திரங்கள், ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள், ஸ்டீல் மற்றும் பம்ப்செட் உற்பத்தி போன்ற தொழில்கள் மிகுந்த அளவில் உள்ளன. மேலும் தங்கம், வைர நகைகள் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றது. தென்னிந்தியாவிற்கே, உயர் கல்விக்கும், மருத்துவ கல்விக்கும் புகழ்பெற்ற மையமாக கோவை உள்ளது.

இன்றைய தினம் மேம்பட்ட தொழில்நுட்பத்தோடு கூடிய பன்னாட்டு நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசின் சார்பில் தேசிய முதலீடு உற்பத்தி மையம் அமைக்க உதவிடவும், மேக் இன் இந்தியா திட்டம் போலவே மேக் இன் கோவை என்ற நிலையை உருவாக்கும் வகையில் கோவையில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அரிய முயற்சிக்கு தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு கோவையில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் பூங்கா அமைக்க தேவயை£ன உதவிகளை வழங்கி, முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story