கூடுதல் கட்டணம் வசூலித்ததால் காங்கேயம் பஸ் நிலையத்தில் பஸ்சை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதம்


கூடுதல் கட்டணம் வசூலித்ததால் காங்கேயம் பஸ் நிலையத்தில் பஸ்சை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 8 Jan 2018 4:30 AM IST (Updated: 8 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் இருந்து காங்கேயம் வழியாக ஈரோடு சென்ற தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், காங்கேயம் பஸ் நிலையத்தில் அந்த பஸ்சை பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காங்கேயம்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தாராபுரம், காங்கேயம் வழியாக ஈரோட்டுக்கு செல்லும் தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை 4 மணி அளவில் புறப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற பக்தர்கள் கூட்டம் அதிகளவில் அதில் பயணம் செய்தனர். இந்த நிலையில் காங்கேயத்தை சேர்ந்த பயணிகள் சிலர் தங்கள் குழந்தைகளுடன் அந்த பஸ்சில் ஏறியுள்ளனர்.

உடனே அவர்களை அந்த பஸ் நடத்துனர் தடுத்து நிறுத்தி, காங்கேயம் செல்வதாக இருந்தால் பஸ் புறப்பட்ட பின்னர் ஏறிக்கொள்ளுங்கள். இருக்கையில் உட்கார்ந்தால் ஈரோடு டிக்கெட்டு தான் கொடுக்க முடியும் என கூறியதாக தெரிகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், வேறு வழியில்லாமல் காங்கேயம் செல்வதற்காக ஈரோடு செல்லும் டிக்கெட்டை கூடுதலாக சுமார் ரூ.20 கொடுத்து வாங்கியுள்ளனர். குறிப்பிட்ட அந்த பஸ் மாலை 6 மணி அளவில் காங்கேயம் பஸ் நிலையம் வந்தது. அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் பஸ்சை முற்றுகையிட்டு நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பயணிகள் சிலர் கூறுகையில், அரசு பஸ் ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இந்தப் போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டு தனியார் பஸ்கள் இப்படி கூடுதல் கட்டணம் வசூலித்து எங்களை வாட்டி வதைக்கின்றனர். நாங்கள் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டு, உடல் வலியுடன் ஊருக்குத் திரும்புகிறோம். இந்த நிலையில் பஸ்சில் எங்களை நின்றுகொண்டே பயணிக்கச் சொல்வதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை, என்றனர்.

காங்கேயம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தின் போது பிரச்சினையை விசாரிப்பதற்கு மோட்டார் வாகன ஆய்வாளரோ, காங்கேயம் தாசில்தாரோ யாரும் வராததால், சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பஸ் ஈரோட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து திங்கட்கிழமை (இன்று) நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அந்த பஸ்சில் பயணம் செய்த ஜனனி (30), சங்கீதா (33) ஆகிய 2 பெண்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story