கர்நாடகம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்கிறது காங்கிரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் உ.பி. முதல்–மந்திரி பேச்சு
கர்நாடகம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்கிறது என்றும், இங்கிருந்து காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகிஆதித்யநாத் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்கிறது என்றும், இங்கிருந்து காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகிஆதித்யநாத் கூறினார்.
பிடுங்கி எறிய வேண்டும்கர்நாடக பா.ஜனதா சார்பில் மாற்றத்திற்கான யாத்திரை பயண பொதுக்கூட்டம் பெங்களூரு விஜயநகரில் நேற்று நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகிஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியதாவது:–
கர்நாடகத்தை முன்னேற்றம் அடைய செய்ய பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும். காங்கிரஸ் மேலிடம் கர்நாடகத்தை ஏ.டி.எம். மையமாக பயன்படுத்தி கொள்கிறது. இதை தடுக்க வேண்டியது அவசியம். மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.
இந்து விரோத போக்குஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதல்–மந்திரி சித்தராமையா இந்து விரோத போக்கை பின்பற்றுகிறார்கள். அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது ராகுல் காந்தி திடீரென கோவில்கள், மடங்களுக்கு சென்றார். அதே போல் சித்தராமையா நானும் இந்து தான் என சொல்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் சித்தராமையாவுக்கு இப்போது இந்து மதம் நினைவுக்கு வந்துள்ளது.
இந்து என்பது மதம் அல்ல. அது நமது வாழ்க்கை முறை. கர்நாடகத்தில் முன்பு பா.ஜனதா அரசு இருந்தபோது பசுவதை தடை சட்டம் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அப்போது கவர்னர் மூலம் அந்த சட்டத்தை காங்கிரஸ் தடுத்துவிட்டது. காங்கிரஸ் அரசு அமைந்ததும் அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஒரு உண்மையான இந்து, பசுக்களை கொல்வதை சகித்துக்கொள்வாரா?.
வளர்ச்சி சாத்தியம் இல்லைகர்நாடகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கொள்கை உடைய கட்சிகளின் ஆட்சி இருக்க வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பெங்களூருவில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கினார். சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது. இப்போது உள்ள பிரதமர் மோடி, பெங்களூரு நகருக்கு ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்தை வழங்கி இருக்கிறார். கர்நாடகம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும்.
நாட்டின் அனைத்து பகுதியிலும் காங்கிரஸ் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களிலும் அக்கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை வளர்ச்சி என்பது சாத்தியம் இல்லை. கர்நாடகத்தில் காட்டு நியாயம் உள்ளது. அனுமன் ஜெயந்தி கொண்டாட இந்த அரசு அனுமதி வழங்குவது இல்லை. அனுமன் பிறந்த பூமி கர்நாடகம்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைராமன்–சீதையை தேடி அழைத்து வர அனுமன் வழி காட்டினார். அத்தகைய பெருமை மிக்க அனுமன் ஜெயந்திக்கு இந்த அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த அரசை என்னவென்று சொல்வது. காங்கிரஸ் ஊழல் கொள்கை மற்றும் சமூகங்களை உடைக்கும் எண்ணங்களை கொண்டு செயல்படுகிறது. வளர்ச்சி மந்திரத்தால் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் வளர்ச்சியில் கர்நாடகம் மட்டும் பின்னோக்கி செல்கிறது.
உத்தரபிரதேசத்தில் இதற்கு முன்பு ஆட்சி செய்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளின் ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்து இருந்தது. அங்கு பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்துள்ளது. கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன. கர்நாடகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. புண்ணிய பூமியான கர்நாடகத்தில் ஊழல் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அதிகாரம் செய்வது சரியல்ல. அதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.
இவ்வாறு யோகிஆதித்யநாத் பேசினார்.