தாட்கோ திட்டத்தில் கடன் கிடைக்காததால் குழந்தைகளை விற்க அனுமதி கேட்டு மனு கொடுத்த நபரால் பரபரப்பு


தாட்கோ திட்டத்தில் கடன் கிடைக்காததால் குழந்தைகளை விற்க அனுமதி கேட்டு மனு கொடுத்த நபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jan 2018 3:45 AM IST (Updated: 9 Jan 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தாட்கோ திட்டத்தில் கடன் கிடைக்காததால் குழந்தைகளை விற்க அனுமதி கேட்டு ஒருவர் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மனையிடம் வழங்க கோருதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர். அதன்படி 250 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் லதா உத்தரவிட்டார்.

மேலும் முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் இருந்து வரும் மனுக்கள் மற்றும் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் வேம்பத்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன்(வயது 35) என்பவர் மனு ஒன்றை கலெக்டரிடம் கொடுத்தார். அந்த மனுவில், தனக்கு தாட்கோ திட்டத்தில் கடன் கிடைக்கவில்லை என்றும், இதனால் சிரமமடைந்து வருகிறேன். எனவே என்னுடைய 2 குழந்தைகளையும் விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை படித்த கலெக்டர் லதா அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசாரை அழைத்து மனு கொடுத்த கண்ணனை நகர் போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து உடனே அங்கிருந்த போலீசார் கண்ணனை அழைத்துச் சென்று நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. குழந்தைகளை விற்க அனுமதி கேட்டு மனு கொடுத்த நபரால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story