திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் விலையில்லா வண்ணதொலைக்காட்சி பெட்டிகள் உடைப்பு


திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் விலையில்லா வண்ணதொலைக்காட்சி பெட்டிகள் உடைப்பு
x
தினத்தந்தி 9 Jan 2018 3:45 AM IST (Updated: 9 Jan 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் விலையில்லா வண்ணதொலைக்காட்சி பெட்டிகள் உடைத்து வளாகத்தில் வீசி எறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்,

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது பொதுமக்களுக்கு விலையில்லா வண்ணதொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் திருப்பூரில் உள்ள பொது மக்களுக்கும் தொலைகாட்சி பெட்டிகள் வார்டு வாரியாக வழங்கப்பட்டு வந்தன. அப்போது ஒரு சில வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படுவதற்குள் பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதனால் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததால் அந்த தொலைகாட்சி பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கமுடியாமல் போனது. அதன் காரணமாக அந்த தொலைக்காட்சி பெட்டிகள் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டு அந்த அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

இதில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகளில் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு வகுப்பறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு அங்கிருந்த 10–க்கும் மேற்பட்ட வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் எடுக்கப்பட்டு வகுப்பறைக்கு வெளியில் பள்ளி வளாகத்தில் வீசி உடைத்து எறியப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறிதாவது:–

அந்த பள்ளியில் பழுதான 150 விலையில்லா வண்ண தொலைகாட்சி பெட்டிகள் கடந்த 2012–ம் ஆண்டு முதல் 4 வகுப்பறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாரோ மர்ம ஆசாமிகள் ஒரு வகுப்பறையின் ஜன்னலை உடைத்து அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்துள்ளனர். அதன் மேல் மூடியை மட்டும் பள்ளி வளாகத்தில் வீசிவிட்டு அதனுள் இருந்த எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச்சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story